முகவுரை – தொடர்ச்சி
குரு சாயி நாதரின் மகத்துவங்களைப் படித்ததாலும், அவரின் கொள்கைகள் மிகவும் எளிமையாக இருந்ததாலும் அவர்பால் கவரப்பட்டு இவ்விரண்டு ஆண்டுகளில் இரு முறை சீரடி சென்று வந்தேன். இம்முறை சென்றபொழுது ஆரத்தி முடிந்து வெளிவந்தபோது எவ்வகையிலாவது தொண்டு செய்யவேண்டும் என்னும் எண்ணம் மேலோங்கி நின்றது.
அன்றிரவு தங்குமிடத்தே உறங்கிக் கொண்டிருந்தபோது ஒரு கனவு வந்தது. அதில் நான் பகவான் சாயி பாபாவின் சரித்திரத்தை ஒரு புத்தகத்தில் எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது அருகில் வந்தவர்கள் எள்ளி நகையாடினார்கள். மனம் தளர்ந்தேன்.
அதிகாலை எழுந்து தேநீர் அருந்தக் கடைக்குச் சென்றேன். அப்பொழுது அங்கிருந்தவர்களில் ஒரு பெரியவர் அழகான தமிழில், “நான் சொல்வதில் நம்பிக்கை வை. கிண்டலுக்கு அஞ்சாமல் நினத்ததைச் செய்” என்றார். அவர் சொன்னது எனக்குத்தான் என்று ஓரிரு நிமிடங்களுக்குப்பின்தான் எனக்கு உறைத்தது. திரும்பிப் பார்த்தேன். அங்கிருந்தவர்களில் தமிழில் பேசியது யார் எனக் கேட்டேன். அப்படி இங்கு யாரும் இல்லை; தமிழிலும் பேசவில்லை என்றனர். அதிர்ச்சியுடன் அங்கிருந்த பலகையில் அமர்ந்தேன். அருகிலிருந்தோர் என்ன என வினவ, நடந்தவற்றைக் கூறினேன். அவர்கள், “நீங்கள் நினைத்தபடி பாபாவின் சரித்திரத்தை தமிழில் எழுதுங்கள். இதுதான் பாபாவின் உத்தரவு” என்றனர்.
பாபாவின் சரித்திரத்த எழுத எனக்கு அருகதையுள்ளதா? என எண்ணிப் பார்த்தேன்.
அப்படியே எழுதினாலும் அது:
“பாம்பைப் பார்த்து மண்புழுதானும் ஆடமுயன்றது”
போல்தான் இருக்கும் என நினைக்கிறேன்.
இருப்பினும்:
“கல்லாத மூடன் கவிதை மொழியறியேன்
சொல்லால் தொடங்குகிறேன்…..”(தொழுகைநாமா)
“சிற்றடியானும் சொற்ற கவிகளின்
முற்றும் பிழை களிருந் திடினும்
கற்றவர்க ளிதை குற்ற மகற்றியே
பற்றுதலாகப் படிப்பீரே”(சுகிர்த மெய்ஞான சங்கீர்த்தனம்)
எனக்கூறி அகிலாண்டகோடி பிரமாண்ட நாயகன், ஞான சத் குரு சாயி பாபாவின் சீரடி பற்றித் தொழுது வணங்கி என் கடமையைச் செய்ய முயலுகிறேன்.
இல்லை! இல்லை!
செய்யச் சொன்னவரும் அவரே!
செய்பவரும் அவரே! எல்லாம் அவரே!
Posted: September 13th, 2009 under சீரடி சாயி பாபா, முகவுரை.
Comments: 1
Comments
Comment from வையம்
Time: 13/09/2009, 7:13 am




Write a comment